ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

தலைநிமிர்வாய் தமிழினமே

விரிந்த இவ்வுயர் மனித சாகரத்தில்
      விதைத்தெழுந்தவனே தமிழன் !
கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் !
கருணையை விதைத்து அன்பை பெருக்கியவன் !
புரியாத புதிராய் பூமிக்குள் பூத்தவன் !
புரிகின்ற மனிதருக்கே இடமில்லா பூமியில்
சரித்திரங்களும் பல்நற் காவியங்களும்
சரியாத மொழிகொண்டே படைத்தவன் !

இருப்பில்லா இலக்கியங்களுள் எந்தமிழனின்
இலக்கியங்களிலுண்டாம் நற்கருத்து !
திருக்குறளென்னும் அறநூல் படைத்து
திருந்தா மனிதரையும் திருத்தியதுண்டு
கருப்பொருள் குலைந்த கதையை யாய்ந்து
கம்ப ராமாயணமும் பாடியதுண்டு !
மருவற்ற இயேசு காவியமும் எந்தமிழனின்
மிளிர்கின்ற இலக்கியச் சிதறல்களாம்

பின்னிரவில் துணைவிடுத்து வயலில்
பாருக்குழைக்க பாதம் பதிப்பான்
தன்னலங் கருதாவுழைப்பில் தரணியை
தலைநிமிர்த்தியவனும் எந்தமிழனே !
முன்னிலவுப் பனியில் தன் பத்தினியோடு
முத்தங்களை மொத்தமாய் குத்தகையெடுத்து
புன்னகைப் பூக்களாய் புதுக்கவிதை
பிரசவிக்கும் பாவலனும் எந்தமிழனே !

எண்ணங்களை எழுத்துள் நுழைத்து
அழகு தமிழில் கவியுரை எழுதி
விண்ணோங்கும் புகழ் சேர்த்துப்புவியில்
விந்தைகள் பலநாட்டி கவியில்
மண்ணுலகெங்கும் தமிழின் பெயர் பதிக்க
மானிடர் யாவும் தமிழுரைக்க
கண்களில் மிதக்கும் கனவு...! என்றோ
கற்பனையல்ல நிசமே உரைக்கும் பார் !
புதன், 15 செப்டம்பர், 2010

யாத்திரிகன்


எல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை
இரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற
கால்கள் மட்டும்
பாதை தேடி களைத்தே யோயும்

முகமுரசிச் செல்லும் சிநேகப்புன்னகைகள்
அந்நிய தேசம் மறக்கச்செய்யும்
தலைக்குனிந்த தெருவிளக்கின் மௌனஞ்சலி
என் பயணத்தின் இரவுத்தோழர்கள்

வெண்பனி படரும் தலைமயிர் உதறி
மேலும் நடக்கின்றேன்
பிணங்கள் உலவும் மதூர் நேரம்
நடைப்பிணங்கள் ஏராளம்

கனவுப்பையை முதுகிற் சுமந்து
தொடரும் பயணம்
எடை கூடுமென் கனவுப்பையும்
கலையாக்கனவுகளும் வளர்நிலவாய்...