வெள்ளி, 7 மே, 2010

ஜன்னலோர தேவதை


( இக்கவிதை 2001.06.13 ல் தமிழ்மொழித் தினப்போட்டிக்காக எழுதியது. )

சன்னலோரத்தில் தவமியற்றும்
சிலையவளை நோக்கிய தோழி
புன்னகைப்பூக்களை சிதறடித்தே
பூவையவளை நெருங்கினாள்

“கண்களில் ஏனடி கண்ணீர்”
காரிகையை வினவினாள் தோழி
“பெண்களுக்கே உரித்தான வேதனை
பெரியோர் செய்து வைத்த சோதனை

எத்தனையோ எதிர்பார்ப்பு மனதில்
எழுதி வைத்த மணநாள்
அத்தனையும் இன்று நனவில்
ஆற்றிலிறங்கிய மண் குதிரையானதடி

பெண் பார்க்கும் படலமென்றார்
பேதை நான் வியாபாரப்
பண்டமென்றே பார்வையிட்டார்
பாட்டொன்று பாடென்றார்

பரதமும் ஆடென்றார் பெண்ணை
பேசச்சொல்லுங்கள் என்றே
குரலோடு மனதையும் சோதித்தார்
கன்னியெனை உள்ளேயனுப்பினாரடி

கதவோரம் மறைந்திருந்தேன்
கற்பனையில் மிதந்திருந்தேன்
விதவிதமான கனவுகளில் புவியை
வில்லாய் வளைத்திருந்தேன்

முன்னறையில் இரகசியம் பேசும்
மூத்தோர் குரல் கேட்க
என் செவிகளையும் விரித்து
ஆவலோடு காத்திருந்தேனடி தோழி

மாப்பிள்ளைக்கு ஜரிகைப்பட்டு
மின்னும் சங்கிலி நு}று
சாப்பாட்டுச்செலவு உறவினரின்
சத்திரச் செலவு முழுதும் உமது

பட்டுப்புடவை வைர தங்க நகைகள்
பத்துப்பவுணில் தங்க மோதிரம்
தட்டுக்கள் பலநு}று அதனோடு
திருமணச் செலவு முழுவதும் உமது

சம்பந்தியினர் பட்டியலடுக்க
சிந்தை கலங்கிய எந்தந்தை
நிம்மதியிழந்தார் அன்று முதல்
நரகம் என்பதன் பொருளுணர்ந்தார்

முந்தைய பிறப்பின் பயனோ
முன்னோரின் பாவக்கடனோ
தந்தையின் வேதனை குறையவில்லை
திருமணக்கனவும் கலையவில்லை

அமிலத்தை காதில் பாய்ச்சியவன்
அடுத்தவள் தேடி பறந்துவிட்டான்
நமிடத்தில் மனதை மாற்றிவிட்டான்
நானோ நெருப்புள் உமியானேன்

ஆண்களுக்கு இதயம் வைக்க
இறைவனும் மறந்து விட்டான்
கண்ணீரில் நானிங்கு தினமும்
கரைந்து மாள்கிறேன்

பொருளுக்கும் விலையுண்டு நானோ
பலர் பார்க்க பொருளானேன்
விருந்துண்டு பொருளும் பொருளின்
விலையும் பெறும் விசித்திரச்சந்தை

வியாபாரிகளாய் வந்து எனை
விலை பேசிய வீணர்களே !
மயானத்தில் வந்துமெனை
மயக்காதீர்கள் கோழைகளே !

எண்ணில்லா கொடுங்கனவுகள்
எனக்குள் உதித்து மறைகிறது
கண்ணீரில்லா மீனைப்போல
துடிக்கிறேன் தினமும் நானே!

எரிமலைக்குள் உழல்கின்றேன்
எனைமீட்பார் யாருமில்லை
பரிவோடு எனையணைக்க
பாருக்குள் எவருமில்லை

கைப்பிடிக்க கைப்பணமும்
கொடுக்கின்ற கொடுங்காலம்
தைப்பிறப்பில் மறையாதோ இந்த
தரணியெங்கும் பரவாதோ புதுமை!”

தோழியுரைத்த சோகம் கேட்டு
தோகையழுத்தாள் நெடுநேரம்
“வாழியுரைக்க வந்தேன் தோழி
வீழ்ந்து விட்டாய் ஆண்களை நம்பி

சரித்திரத்தில் இல்லா கொடுமை
சீக்கிரமே ஒழியட்டுமே
சிரிக்கின்ற பெண்களுருவம்
சாளரத்தில் பெருகட்டுமே”

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

mikach sirapaka ullathu.

தோழி சொன்னது…

அருமை ஒரு பெண்ணின் துயரத்தை அழகாக வடிவமைத்து இருக்கிறீர்.

சசிகுமார் பாலகிருஸ்ணன் சொன்னது…

நன்றி தேன்மொழி.