ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

தலைநிமிர்வாய் தமிழினமே





விரிந்த இவ்வுயர் மனித சாகரத்தில்
      விதைத்தெழுந்தவனே தமிழன் !
கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் !
கருணையை விதைத்து அன்பை பெருக்கியவன் !
புரியாத புதிராய் பூமிக்குள் பூத்தவன் !
புரிகின்ற மனிதருக்கே இடமில்லா பூமியில்
சரித்திரங்களும் பல்நற் காவியங்களும்
சரியாத மொழிகொண்டே படைத்தவன் !

இருப்பில்லா இலக்கியங்களுள் எந்தமிழனின்
இலக்கியங்களிலுண்டாம் நற்கருத்து !
திருக்குறளென்னும் அறநூல் படைத்து
திருந்தா மனிதரையும் திருத்தியதுண்டு
கருப்பொருள் குலைந்த கதையை யாய்ந்து
கம்ப ராமாயணமும் பாடியதுண்டு !
மருவற்ற இயேசு காவியமும் எந்தமிழனின்
மிளிர்கின்ற இலக்கியச் சிதறல்களாம்

பின்னிரவில் துணைவிடுத்து வயலில்
பாருக்குழைக்க பாதம் பதிப்பான்
தன்னலங் கருதாவுழைப்பில் தரணியை
தலைநிமிர்த்தியவனும் எந்தமிழனே !
முன்னிலவுப் பனியில் தன் பத்தினியோடு
முத்தங்களை மொத்தமாய் குத்தகையெடுத்து
புன்னகைப் பூக்களாய் புதுக்கவிதை
பிரசவிக்கும் பாவலனும் எந்தமிழனே !

எண்ணங்களை எழுத்துள் நுழைத்து
அழகு தமிழில் கவியுரை எழுதி
விண்ணோங்கும் புகழ் சேர்த்துப்புவியில்
விந்தைகள் பலநாட்டி கவியில்
மண்ணுலகெங்கும் தமிழின் பெயர் பதிக்க
மானிடர் யாவும் தமிழுரைக்க
கண்களில் மிதக்கும் கனவு...! என்றோ
கற்பனையல்ல நிசமே உரைக்கும் பார் !




புதன், 15 செப்டம்பர், 2010

யாத்திரிகன்


















எல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை
இரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற
கால்கள் மட்டும்
பாதை தேடி களைத்தே யோயும்

முகமுரசிச் செல்லும் சிநேகப்புன்னகைகள்
அந்நிய தேசம் மறக்கச்செய்யும்
தலைக்குனிந்த தெருவிளக்கின் மௌனஞ்சலி
என் பயணத்தின் இரவுத்தோழர்கள்

வெண்பனி படரும் தலைமயிர் உதறி
மேலும் நடக்கின்றேன்
பிணங்கள் உலவும் மதூர் நேரம்
நடைப்பிணங்கள் ஏராளம்

கனவுப்பையை முதுகிற் சுமந்து
தொடரும் பயணம்
எடை கூடுமென் கனவுப்பையும்
கலையாக்கனவுகளும் வளர்நிலவாய்...

செவ்வாய், 6 ஜூலை, 2010

மூன்றாம் கண்

கனத்துபோன மனதோடு
கோயில் செல்கிறேன்.

செல்லால் அடித்து எம்மை
செல்லா காசாய்
சிதைத்தவர் கூட்டம்
நன்றாய் வாழ நீயும்
அருள் புரிந்திடுவாய் தினமும்

கல்லறை அகழும்
நரமாமிசப் பிணங்கள்
காவலிருப்பாய்
நீயே கடவுள்…!

எம்மின பெண்களை
வன்புணரும் கம்சர்கள்
போதி மரத்து கிளையுடைத்து
நிழல் படுக்கை செய்வாய்
நீயே தேவ தூதன்....!

கல்லாய் போன
கடவுளிடம் ஒரு கேள்வி
கடலளவு தமிழர் இரத்தம்
குடித்தும்
அடங்கவில்லையா
உன் தாகம் மட்டும்…?
இனிமேல் அடுப்பெரிக்கவாவது
உதவட்டும்
கிழிந்துப்போன
பகவத்கீதையும் பைபிளும் .

வியாழன், 1 ஜூலை, 2010

கற்பிணங்கள்


விழியோர கண்ணீரில்
வழிகிறது நம் கனவுகள்
விடைப் பெற்றிட துடிக்குது
கூட்டிலெஞ்சிய உயிர்



முற்வேலிக்குள்ளே முடங்கிக்கிடக்குது
எங்கள் வானம்

முகாரியில் வீசுது
எமைத் தீண்டும் காற்று

முகாமுக்குள்ளேயே முடிந்திடுமோ
எமது வாழ்வு….?

சனி, 26 ஜூன், 2010

ஹெக்கூ...

அழுகிப்போன சதைத்துணுக்குகளில்
மடிந்துக் கிடக்குது
மானுடம்.

வெள்ளி, 7 மே, 2010

ஜன்னலோர தேவதை


( இக்கவிதை 2001.06.13 ல் தமிழ்மொழித் தினப்போட்டிக்காக எழுதியது. )

சன்னலோரத்தில் தவமியற்றும்
சிலையவளை நோக்கிய தோழி
புன்னகைப்பூக்களை சிதறடித்தே
பூவையவளை நெருங்கினாள்

“கண்களில் ஏனடி கண்ணீர்”
காரிகையை வினவினாள் தோழி
“பெண்களுக்கே உரித்தான வேதனை
பெரியோர் செய்து வைத்த சோதனை

எத்தனையோ எதிர்பார்ப்பு மனதில்
எழுதி வைத்த மணநாள்
அத்தனையும் இன்று நனவில்
ஆற்றிலிறங்கிய மண் குதிரையானதடி

பெண் பார்க்கும் படலமென்றார்
பேதை நான் வியாபாரப்
பண்டமென்றே பார்வையிட்டார்
பாட்டொன்று பாடென்றார்

பரதமும் ஆடென்றார் பெண்ணை
பேசச்சொல்லுங்கள் என்றே
குரலோடு மனதையும் சோதித்தார்
கன்னியெனை உள்ளேயனுப்பினாரடி

கதவோரம் மறைந்திருந்தேன்
கற்பனையில் மிதந்திருந்தேன்
விதவிதமான கனவுகளில் புவியை
வில்லாய் வளைத்திருந்தேன்

முன்னறையில் இரகசியம் பேசும்
மூத்தோர் குரல் கேட்க
என் செவிகளையும் விரித்து
ஆவலோடு காத்திருந்தேனடி தோழி

மாப்பிள்ளைக்கு ஜரிகைப்பட்டு
மின்னும் சங்கிலி நு}று
சாப்பாட்டுச்செலவு உறவினரின்
சத்திரச் செலவு முழுதும் உமது

பட்டுப்புடவை வைர தங்க நகைகள்
பத்துப்பவுணில் தங்க மோதிரம்
தட்டுக்கள் பலநு}று அதனோடு
திருமணச் செலவு முழுவதும் உமது

சம்பந்தியினர் பட்டியலடுக்க
சிந்தை கலங்கிய எந்தந்தை
நிம்மதியிழந்தார் அன்று முதல்
நரகம் என்பதன் பொருளுணர்ந்தார்

முந்தைய பிறப்பின் பயனோ
முன்னோரின் பாவக்கடனோ
தந்தையின் வேதனை குறையவில்லை
திருமணக்கனவும் கலையவில்லை

அமிலத்தை காதில் பாய்ச்சியவன்
அடுத்தவள் தேடி பறந்துவிட்டான்
நமிடத்தில் மனதை மாற்றிவிட்டான்
நானோ நெருப்புள் உமியானேன்

ஆண்களுக்கு இதயம் வைக்க
இறைவனும் மறந்து விட்டான்
கண்ணீரில் நானிங்கு தினமும்
கரைந்து மாள்கிறேன்

பொருளுக்கும் விலையுண்டு நானோ
பலர் பார்க்க பொருளானேன்
விருந்துண்டு பொருளும் பொருளின்
விலையும் பெறும் விசித்திரச்சந்தை

வியாபாரிகளாய் வந்து எனை
விலை பேசிய வீணர்களே !
மயானத்தில் வந்துமெனை
மயக்காதீர்கள் கோழைகளே !

எண்ணில்லா கொடுங்கனவுகள்
எனக்குள் உதித்து மறைகிறது
கண்ணீரில்லா மீனைப்போல
துடிக்கிறேன் தினமும் நானே!

எரிமலைக்குள் உழல்கின்றேன்
எனைமீட்பார் யாருமில்லை
பரிவோடு எனையணைக்க
பாருக்குள் எவருமில்லை

கைப்பிடிக்க கைப்பணமும்
கொடுக்கின்ற கொடுங்காலம்
தைப்பிறப்பில் மறையாதோ இந்த
தரணியெங்கும் பரவாதோ புதுமை!”

தோழியுரைத்த சோகம் கேட்டு
தோகையழுத்தாள் நெடுநேரம்
“வாழியுரைக்க வந்தேன் தோழி
வீழ்ந்து விட்டாய் ஆண்களை நம்பி

சரித்திரத்தில் இல்லா கொடுமை
சீக்கிரமே ஒழியட்டுமே
சிரிக்கின்ற பெண்களுருவம்
சாளரத்தில் பெருகட்டுமே”