வியாழன், 23 ஜூன், 2011

தென்றலைத் தீண்டு…!வண்ணங்களை குழைத்து இறைவன்
        வரைந்த ஆகர்ஷ சித்திரம் ; மாலை !
எண்ணங்கள் ஏழ்நூறாய் எழுத்துக்குள்
        அர்த்தமுடன் புதைகின்ற பொன்வேளை !

கற்பனையின் ஆழத்தை கடலோடு ஒப்பிட்டு
       கண்ணீரின் சுவையால் கடலுக்கு உப்பிட்டு
பற்றற்ற வாழ்கையின் விடியலைத் தேடி
       புதைகின்றேன் ; கடற்கரை மணற் மேட்டில் :

இறந்த காலத்தை மீட்டும் எண்ணவலைகள்
       இனியொரு வசந்தம் வருமா? என்றே ஏங்கும்!
பறக்கத் துடிக்கும் பாழும் மனச்சிறகுகள்
       பற்றிசை நோக்கி சிறகை விரிக்கும் , பறக்கும்.

நிழல் கூட நிஜமே என்று எண்ணத் தோன்றும் ;
       நான் நடந்தால் கூடவர நிழலும் மறுக்கும் !
உழல்கின்ற என் மனதில் சுதி மீட்டும் ராகங்கள்
       உரிமையுடன் தீண்டும் தென்றல் ; புதுராகம் !

பரிபாஷை பேசும் பறவைகள் வேண்டாம்
       புரிகின்ற ஒரு பாஷை போதும் ; இயற்கையில்
புரியாத எண்ணங்கள் உயிருக்குள் பூப்பூக்கும் !
       புரிகின்ற போதே கல்லறைக்குள் உடல் தூங்கும் !

2 கருத்துகள்:

Krishanth சொன்னது…

இறந்த காலத்தை மீட்டும் எண்ணவலைகள்இனியொரு வசந்தம் வருமா? என்றே ஏங்கும்!
Super lines....

eniyan சொன்னது…

arumai...thodarungal..