வெள்ளி, 16 அக்டோபர், 2009

கலியுகம்

அழிய வேண்டிய
அழிக்க வேண்டிய
நரகாசுரர்கள்
உயிருடன் உலவுகையில்
கொண்டாடுகிறோம் தீபாவளி.

புதன், 10 ஜூன், 2009

மாற்றங்கள்

மாற்றங்கள் வேண்டும் அகராதியில்
எட்டப்பன் என்ற சொல்லை
எடுத்துவிடுங்கள்
கருணா என்ற சொல்லிருக்கு
காட்டிக்கொடுப்பவன்
என்ற பொருளுக்கு

ஞாயிறு, 17 மே, 2009

உறுத்தல்

என் வாயில் ஒரு தொற்றுப்பல்
எப்போதும் உறுத்திக்கொண்டேயிருந்தது
விழுந்தால் போதுமென்றிருந்தேன்
விழுந்தபோதுதான் தோன்றியது
இருந்திருந்தால் மேலென்று!

திங்கள், 6 ஏப்ரல், 2009

இறுதி யாத்திரை

கண்கள் கூச
உறக்கம் தொலைத்தோம்

பொழுது புலர்ந்தாயிற்றாம்

மீண்டும் தொடங்குகிறோம்
எங்கு செல்கிறோம்…?
எதற்காய் செல்கிறோம்…?

விடைகளற்ற வினாக்களோடு
தொடர்கிறது பயணம்

எதிரிகளின் குண்டுகள்
சுவை பார்த்த தேகம்

காட்டு வழி முற்களும்
எம்மைத் தீண்ட
வெட்கித் தலை குனியும்

கால்கள் தொலையும்
வழி தேடி
மனமும் அலையும்

பாலுக்காய் அழும்
குழந்தைகள்
இரத்தம் தாராளம்

பசியோடு அலையும்
கொடும் காட்டு விலங்குகளும்
இரக்கத்தோடு பாதை விலகும்

தமிழ் குழந்தைகள்
எதிரிகளின்
பயிற்சி இலக்குகள்

பாதையெங்கும்
பழகிய பிணவாடை
கருகிப்போன தமிழுயிர்கள்

உயிர் களைக்கும்
போதெல்லாம்
எஞ்சிய மழலைகளின்
அழுகுரல்
புத்துயிர்ப்பு

மரண ஓலங்கள்
கண்ணீர்ப் பாதைகள்
என்றாலும்
தொடர்ந்து செல்வோம்

நாளைய உதயம்
எமக்கில்லை
உயிர்ப்பிரியும்
இறுதி வினாடிகளின் நப்பாசை
கிழக்குச் சூரியன்

செவ்வாய், 24 மார்ச், 2009

கல்லறை ஒதுக்கீட்டுத்திட்டம்

நாளைய பொழுது
இருப்பேனா? இறப்பேனா?
என்று தெரியாமலே
விடிகிறது காலை!

தமிழர்கள் வாழும்
இடமெங்கும்
கல்லறைக்கு இடமேது?

எனவேதான்
இந்த முன்பதிவுத்திட்டம்.

ஹெக்கூ...

பேரினவாதிகளின் பசிக்கு
பெருந் தீனி
சமாதானப் புறா...!

ஞாயிறு, 18 ஜனவரி, 2009

காத்திருக்குமா தென்றல்…?

மரணத்தின் தூர இடைவெளிகளில்
நிதமும் சஞ்சரிப்பவர்கள் நாம்…!
எப்போது ரசிக்கப் போகிறோம்
காற்றின் சலசலப்பை…?

செவ்வாய், 13 ஜனவரி, 2009

விதைகள்

அழிந்து வரும்
அழிக்கப்பட்டு வரும்
தமிழினத்தின் விதைகள் நாம்.
ஒவ்வொரு விதைகளுக்குள்ளும்
ஒளிந்து கிடக்கும்
விருட்சங்கள் !

விதைப்பதற்குதான்
விதைவதற்குதான்
எமக்கென்று இடமில்லை…