வெள்ளி, 1 ஏப்ரல், 2011

காற்று மறந்த சுவாசம்







ஆயிரம் கவிதைகளுக்கான
முதல் வரி
உன் பெயர்

முதல் வரி
எழுதும் போதே
நிகழ்கிறது
என் மரணம்

உன் தீண்டலில்
உயிர்த்தேன்
விரல்களின்றி




நம் இதழ்கள்
கௌவும் போதே
உயிர் மாற்றம்
நான் நீயாக
நீ நானாக…

நம் பிறப்பு
அர்த்தப்படுகிறது

உன் பார்வை
என்னை தழுவியபோது
இரத்த துளிகளில்
நிறமாற்றம்

என் காதோரம்
இரகசியம் பேசும்
உன் கூந்தல்



நம் தழுவலின் பின்பும்
என் மார்பில்
உனது வெப்பம்
தனியாய் தவிக்கிறது

வீசும் குளிர்காற்றில்
நடுக்கத்துடன்
புதைந்தாய்
என் தோள்களில்
காற்றும் நண்பனானான்



கைகள் கோர்த்து
பாதை தொலைத்து
கால்கள் மறந்தோம்

நம் உயிர்கள்
இன்னும் நமக்குள்

சிவப்புப் பனித்துளி
உன் இரத்தம்
முற்செடிக்கு
மரண தண்டனை



எந்த வினாடியில்
என்னை மறந்தேன்…?
எந்த வினாடியில்
என்னுள் நுழைந்தாய்..?

உன் இரத்தம் பட்ட
பூமி சொர்க்கமானது

இன்னும் நடந்தோம்
காற்றின் போக்கில்
காகிதமாய்



விரலோடு விரல் புதைத்து
விடியலின் மறைவோடு
கால்கள் கெஞ்சின

எப்போதும் இப்படியே
இருந்து விடக்கூடாதோ..?
இதயத்தின் ஓரத்தில்
இடைவிடாத படபடப்பு
பட்டாம் பூச்சியின்
துடிதுடிப்பு…



உன் உதடுகளின்
உச்சரிப்பு
என் உதடுகளில்
அடக்கம்

மொழி புரியாத காற்று
அர்த்தம் தேடி
அலையுது
தேடல் சுகமானது
தொலைக்காமலே
தேடித் தொலைவது



இன்னும் நடந்தோம்
இமைகள் கனவோடு
கைக்கோர்க்க
இன்னும் நடந்தோம்

நீண்ட தூரப்பயணம்
கண்கள் பாதை தேடி
பயணமானது



மனிதர் மறந்த
காடு
தப்பிப்பிழைத்த
மிருகம்

நமக்கு கீழே மேகம்
கண்கள் தொட்டால்
வானம்
மேகத்தழுவல்

மலைச்சிகரத்தில்
ஓர் கற்பாறை
நம் சிம்மாசனமாகிறது



வார்த்தைகளற்ற
மௌனம்
நம் மொழி

உன் உதடுகளின்
விளிம்பில்
புன்னகை
என் உதடுகள்
களவாடத்தானே

நாளையை மறந்து
இந்த வினாடிகள்
நம் சொந்தமாயின



உடல்கள் மறந்து
ஒருவருள் ஒருவர்
உயிர்த்தெழுந்தோம்

ஆறறிவைப் பார்த்து
ஐந்தாம் அறிவு
நாணத்தோடு
தலைசாய்த்து கொண்டது

இந்த விநாடியிலேயே
பூமிப்பந்து
நின்று விடக்கூடாதா?
ஆனாலும்
வினாடி முற்களுக்கு
அவசரம்
விரைவாய் சுழன்றது



உப்புக்கரிக்கும்
உன் வியர்வை
எனது உதடுகளில்

வெட்கத்தில் சூரியன்
சிவப்பாடை
அணிந்தான்

தேனுண்ட வண்டின்
தள்ளாட்டம்
எம்முள்



இரக்கம் மறந்த
காலதேவனால்
மீண்டும் பயணம்
அடிவாரம் நோக்கிய
தெளிவான
பயணம்

வந்த இடம்
தடமறிந்தோம்

எதிரெதிர் திசைகளில்
நம்மிருவர் பாதைகள்



தெரியாமலே தேய்ந்தோம்
தெளியாமலே வாழ்ந்தோம்
பிரிவுக்கான மனு
நம்மிருவர் கைகளில்

கைகள்
மாற்றிக் கொண்டோம்
அழைப்பிதழ்
‘நம்’
திருமண அழைப்பிதழ்கள்

இன்னும்
ஏனோ தயக்கம்
எதையோ
விட்டுச்செல்வதாய்
தடுமாற்றம்



நாளைய
உன் திருமணத்தில்
பார்வையாளனாக
நான்..!

இறுதி அணைப்பு
பிரிவுக்கான
பிரியாவிடை

தூரத்து சிகரத்தில்
ஒற்றை கற்பார்வையில்
நம் பிம்பங்கள்
தனியாய் புலம்பட்டும்



உன் கண்களில்
தேங்கிக் கிடக்கும்
என் கனவுகளை மட்டும்
தனியாய்
எடுத்துக் கொண்டேன்
மரணத்திற்கு பக்கத்தில்
ஒரு தீக்குச்சி வெளிச்சம்
நாமாக
நானாக
உணர்கிறேன்



உலகம் சிறியது
மீண்டும் சந்திப்போம்
நண்பர்களாக…
“போய் வா தோழி ”




6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

nallaa irukku

பெயரில்லா சொன்னது…

கவிதை படிக்கவா என்னை அழைத்தாய.....

என் காதலை ஏன் மீட்டினாய் உன் வரிகளில்...

ஓரிரு வரிகள் பொருந்தாயினும்.... மிச்சம் மனதில் எச்சமே....

கவிதைக்குள் கவலை..
கவிதைக்குள் மகிழ்ச்சி.....
கவிதைக்குள் புரிப்பு....
கவிதைக்குள் ஆணந்த கண்ணீர்...

இன்னுமொருமுறை இந்த கவிதையை படிக்க சொல்லாதே கண்ணீர் மிச்சமில்லை

lenin

சசிகுமார் பாலகிருஸ்ணன் சொன்னது…

நன்றி லெனின்.
உங்கள் விமர்சனமும் கவிதையை போன்றே இருக்கிறது.

தமிழ்த்தோட்டம் சொன்னது…

உணர்வுகள் கவி வரிகளில் புரளுகிறது

சசிகுமார் பாலகிருஸ்ணன் சொன்னது…

நன்றி தம்பி கூர்மதியான்.

சசிகுமார் பாலகிருஸ்ணன் சொன்னது…

நன்றி தமிழ்த்தோட்டம்....