திங்கள், 6 ஏப்ரல், 2009

இறுதி யாத்திரை

கண்கள் கூச
உறக்கம் தொலைத்தோம்

பொழுது புலர்ந்தாயிற்றாம்

மீண்டும் தொடங்குகிறோம்
எங்கு செல்கிறோம்…?
எதற்காய் செல்கிறோம்…?

விடைகளற்ற வினாக்களோடு
தொடர்கிறது பயணம்

எதிரிகளின் குண்டுகள்
சுவை பார்த்த தேகம்

காட்டு வழி முற்களும்
எம்மைத் தீண்ட
வெட்கித் தலை குனியும்

கால்கள் தொலையும்
வழி தேடி
மனமும் அலையும்

பாலுக்காய் அழும்
குழந்தைகள்
இரத்தம் தாராளம்

பசியோடு அலையும்
கொடும் காட்டு விலங்குகளும்
இரக்கத்தோடு பாதை விலகும்

தமிழ் குழந்தைகள்
எதிரிகளின்
பயிற்சி இலக்குகள்

பாதையெங்கும்
பழகிய பிணவாடை
கருகிப்போன தமிழுயிர்கள்

உயிர் களைக்கும்
போதெல்லாம்
எஞ்சிய மழலைகளின்
அழுகுரல்
புத்துயிர்ப்பு

மரண ஓலங்கள்
கண்ணீர்ப் பாதைகள்
என்றாலும்
தொடர்ந்து செல்வோம்

நாளைய உதயம்
எமக்கில்லை
உயிர்ப்பிரியும்
இறுதி வினாடிகளின் நப்பாசை
கிழக்குச் சூரியன்

2 கருத்துகள்:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொன்னது…

//நாளைய உதயம்
எமக்கில்லை
உயிர்ப்பிரியும்
இறுதி வினாடிகளின் நப்பாசை
கிழக்குச் சூரியன்//

அருமையான சொற்பிரயோகம்

மனம் நொந்து உயிர் வெந்து உணர்வுகள் ஊமையாய் கருக்கப்பட்டும் உயிருடன் தான் இருக்கின்றான் தமிழன் நாளை உதயமாகும் என்ற நம்பிக்கையோடு

வாழ்த்துக்கள்

சசிகுமார் பாலகிருஸ்ணன் சொன்னது…

நன்றி தோழி.

தமிழர்களின் உண்மையான எதிரி சிங்களவன் என்பதை விட அவனும் தமிழனாகவே இருக்கின்றான்.