வியாழன், 23 ஜூன், 2011

தென்றலைத் தீண்டு…!வண்ணங்களை குழைத்து இறைவன்
        வரைந்த ஆகர்ஷ சித்திரம் ; மாலை !
எண்ணங்கள் ஏழ்நூறாய் எழுத்துக்குள்
        அர்த்தமுடன் புதைகின்ற பொன்வேளை !

கற்பனையின் ஆழத்தை கடலோடு ஒப்பிட்டு
       கண்ணீரின் சுவையால் கடலுக்கு உப்பிட்டு
பற்றற்ற வாழ்கையின் விடியலைத் தேடி
       புதைகின்றேன் ; கடற்கரை மணற் மேட்டில் :

இறந்த காலத்தை மீட்டும் எண்ணவலைகள்
       இனியொரு வசந்தம் வருமா? என்றே ஏங்கும்!
பறக்கத் துடிக்கும் பாழும் மனச்சிறகுகள்
       பற்றிசை நோக்கி சிறகை விரிக்கும் , பறக்கும்.

நிழல் கூட நிஜமே என்று எண்ணத் தோன்றும் ;
       நான் நடந்தால் கூடவர நிழலும் மறுக்கும் !
உழல்கின்ற என் மனதில் சுதி மீட்டும் ராகங்கள்
       உரிமையுடன் தீண்டும் தென்றல் ; புதுராகம் !

பரிபாஷை பேசும் பறவைகள் வேண்டாம்
       புரிகின்ற ஒரு பாஷை போதும் ; இயற்கையில்
புரியாத எண்ணங்கள் உயிருக்குள் பூப்பூக்கும் !
       புரிகின்ற போதே கல்லறைக்குள் உடல் தூங்கும் !

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

காற்று மறந்த சுவாசம்ஆயிரம் கவிதைகளுக்கான
முதல் வரி
உன் பெயர்

முதல் வரி
எழுதும் போதே
நிகழ்கிறது
என் மரணம்

உன் தீண்டலில்
உயிர்த்தேன்
விரல்களின்றி
நம் இதழ்கள்
கௌவும் போதே
உயிர் மாற்றம்
நான் நீயாக
நீ நானாக…

நம் பிறப்பு
அர்த்தப்படுகிறது

உன் பார்வை
என்னை தழுவியபோது
இரத்த துளிகளில்
நிறமாற்றம்

என் காதோரம்
இரகசியம் பேசும்
உன் கூந்தல்நம் தழுவலின் பின்பும்
என் மார்பில்
உனது வெப்பம்
தனியாய் தவிக்கிறது

வீசும் குளிர்காற்றில்
நடுக்கத்துடன்
புதைந்தாய்
என் தோள்களில்
காற்றும் நண்பனானான்கைகள் கோர்த்து
பாதை தொலைத்து
கால்கள் மறந்தோம்

நம் உயிர்கள்
இன்னும் நமக்குள்

சிவப்புப் பனித்துளி
உன் இரத்தம்
முற்செடிக்கு
மரண தண்டனைஎந்த வினாடியில்
என்னை மறந்தேன்…?
எந்த வினாடியில்
என்னுள் நுழைந்தாய்..?

உன் இரத்தம் பட்ட
பூமி சொர்க்கமானது

இன்னும் நடந்தோம்
காற்றின் போக்கில்
காகிதமாய்விரலோடு விரல் புதைத்து
விடியலின் மறைவோடு
கால்கள் கெஞ்சின

எப்போதும் இப்படியே
இருந்து விடக்கூடாதோ..?
இதயத்தின் ஓரத்தில்
இடைவிடாத படபடப்பு
பட்டாம் பூச்சியின்
துடிதுடிப்பு…உன் உதடுகளின்
உச்சரிப்பு
என் உதடுகளில்
அடக்கம்

மொழி புரியாத காற்று
அர்த்தம் தேடி
அலையுது
தேடல் சுகமானது
தொலைக்காமலே
தேடித் தொலைவதுஇன்னும் நடந்தோம்
இமைகள் கனவோடு
கைக்கோர்க்க
இன்னும் நடந்தோம்

நீண்ட தூரப்பயணம்
கண்கள் பாதை தேடி
பயணமானதுமனிதர் மறந்த
காடு
தப்பிப்பிழைத்த
மிருகம்

நமக்கு கீழே மேகம்
கண்கள் தொட்டால்
வானம்
மேகத்தழுவல்

மலைச்சிகரத்தில்
ஓர் கற்பாறை
நம் சிம்மாசனமாகிறதுவார்த்தைகளற்ற
மௌனம்
நம் மொழி

உன் உதடுகளின்
விளிம்பில்
புன்னகை
என் உதடுகள்
களவாடத்தானே

நாளையை மறந்து
இந்த வினாடிகள்
நம் சொந்தமாயினஉடல்கள் மறந்து
ஒருவருள் ஒருவர்
உயிர்த்தெழுந்தோம்

ஆறறிவைப் பார்த்து
ஐந்தாம் அறிவு
நாணத்தோடு
தலைசாய்த்து கொண்டது

இந்த விநாடியிலேயே
பூமிப்பந்து
நின்று விடக்கூடாதா?
ஆனாலும்
வினாடி முற்களுக்கு
அவசரம்
விரைவாய் சுழன்றதுஉப்புக்கரிக்கும்
உன் வியர்வை
எனது உதடுகளில்

வெட்கத்தில் சூரியன்
சிவப்பாடை
அணிந்தான்

தேனுண்ட வண்டின்
தள்ளாட்டம்
எம்முள்இரக்கம் மறந்த
காலதேவனால்
மீண்டும் பயணம்
அடிவாரம் நோக்கிய
தெளிவான
பயணம்

வந்த இடம்
தடமறிந்தோம்

எதிரெதிர் திசைகளில்
நம்மிருவர் பாதைகள்தெரியாமலே தேய்ந்தோம்
தெளியாமலே வாழ்ந்தோம்
பிரிவுக்கான மனு
நம்மிருவர் கைகளில்

கைகள்
மாற்றிக் கொண்டோம்
அழைப்பிதழ்
‘நம்’
திருமண அழைப்பிதழ்கள்

இன்னும்
ஏனோ தயக்கம்
எதையோ
விட்டுச்செல்வதாய்
தடுமாற்றம்நாளைய
உன் திருமணத்தில்
பார்வையாளனாக
நான்..!

இறுதி அணைப்பு
பிரிவுக்கான
பிரியாவிடை

தூரத்து சிகரத்தில்
ஒற்றை கற்பார்வையில்
நம் பிம்பங்கள்
தனியாய் புலம்பட்டும்உன் கண்களில்
தேங்கிக் கிடக்கும்
என் கனவுகளை மட்டும்
தனியாய்
எடுத்துக் கொண்டேன்
மரணத்திற்கு பக்கத்தில்
ஒரு தீக்குச்சி வெளிச்சம்
நாமாக
நானாக
உணர்கிறேன்உலகம் சிறியது
மீண்டும் சந்திப்போம்
நண்பர்களாக…
“போய் வா தோழி ”
சனி, 26 மார்ச், 2011

நிழல்காலம்...கனவெல்லாம் நீயே...
என் நினைவெல்லாம் நீயே...
என் உயிர் சுட்டுப்போனாய்
காதல் தீயே...!


முதலோடு சிலநாள்
முடிவோடு சிலநாள்
இருந்தாலும் வாழ்ந்தாய்
என்னுள் பலநாள்...!


ஞாயிறு, 20 மார்ச், 2011

நெருப்புக் கரங்கள்பற்றி எரிகிறது அவனுடல்
எத்தனை கோடி எண்ணங்கள்
எத்தனை கோடி ஆசைகள்
அத்தனையும் எரிகிறது அவனோடு

தீயின் வெப்பம் தீண்டவில்லை
அவன் இதய வெப்பம் தீண்டுகிறது
தீபக்கொழுந்தின் குழுமை
அவன் பேனை முனையில் வடிகிறது

யாகம் நடத்திப் பார்கிறது
யாசகம் கேட்டு நிற்கிறது
அவனிதயம் தனித்தே நிற்கிறது
துணையை இழந்து தவிக்கிறது


தீயின் வயதை தெரிந்திடவே
உடலை தீயிட்டு பார்கிறது
அவன் உயிரும் மெல்ல பிரிந்திடவே
தீயின் வயதும் தெரிகிறது

தீக்கு இன்னும் வயதாகவில்லை.


ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

தலைநிமிர்வாய் தமிழினமே

விரிந்த இவ்வுயர் மனித சாகரத்தில்
      விதைத்தெழுந்தவனே தமிழன் !
கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் !
கருணையை விதைத்து அன்பை பெருக்கியவன் !
புரியாத புதிராய் பூமிக்குள் பூத்தவன் !
புரிகின்ற மனிதருக்கே இடமில்லா பூமியில்
சரித்திரங்களும் பல்நற் காவியங்களும்
சரியாத மொழிகொண்டே படைத்தவன் !

இருப்பில்லா இலக்கியங்களுள் எந்தமிழனின்
இலக்கியங்களிலுண்டாம் நற்கருத்து !
திருக்குறளென்னும் அறநூல் படைத்து
திருந்தா மனிதரையும் திருத்தியதுண்டு
கருப்பொருள் குலைந்த கதையை யாய்ந்து
கம்ப ராமாயணமும் பாடியதுண்டு !
மருவற்ற இயேசு காவியமும் எந்தமிழனின்
மிளிர்கின்ற இலக்கியச் சிதறல்களாம்

பின்னிரவில் துணைவிடுத்து வயலில்
பாருக்குழைக்க பாதம் பதிப்பான்
தன்னலங் கருதாவுழைப்பில் தரணியை
தலைநிமிர்த்தியவனும் எந்தமிழனே !
முன்னிலவுப் பனியில் தன் பத்தினியோடு
முத்தங்களை மொத்தமாய் குத்தகையெடுத்து
புன்னகைப் பூக்களாய் புதுக்கவிதை
பிரசவிக்கும் பாவலனும் எந்தமிழனே !

எண்ணங்களை எழுத்துள் நுழைத்து
அழகு தமிழில் கவியுரை எழுதி
விண்ணோங்கும் புகழ் சேர்த்துப்புவியில்
விந்தைகள் பலநாட்டி கவியில்
மண்ணுலகெங்கும் தமிழின் பெயர் பதிக்க
மானிடர் யாவும் தமிழுரைக்க
கண்களில் மிதக்கும் கனவு...! என்றோ
கற்பனையல்ல நிசமே உரைக்கும் பார் !
புதன், 15 செப்டம்பர், 2010

யாத்திரிகன்


எல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை
இரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற
கால்கள் மட்டும்
பாதை தேடி களைத்தே யோயும்

முகமுரசிச் செல்லும் சிநேகப்புன்னகைகள்
அந்நிய தேசம் மறக்கச்செய்யும்
தலைக்குனிந்த தெருவிளக்கின் மௌனஞ்சலி
என் பயணத்தின் இரவுத்தோழர்கள்

வெண்பனி படரும் தலைமயிர் உதறி
மேலும் நடக்கின்றேன்
பிணங்கள் உலவும் மதூர் நேரம்
நடைப்பிணங்கள் ஏராளம்

கனவுப்பையை முதுகிற் சுமந்து
தொடரும் பயணம்
எடை கூடுமென் கனவுப்பையும்
கலையாக்கனவுகளும் வளர்நிலவாய்...

செவ்வாய், 6 ஜூலை, 2010

மூன்றாம் கண்

கனத்துபோன மனதோடு
கோயில் செல்கிறேன்.

செல்லால் அடித்து எம்மை
செல்லா காசாய்
சிதைத்தவர் கூட்டம்
நன்றாய் வாழ நீயும்
அருள் புரிந்திடுவாய் தினமும்

கல்லறை அகழும்
நரமாமிசப் பிணங்கள்
காவலிருப்பாய்
நீயே கடவுள்…!

எம்மின பெண்களை
வன்புணரும் கம்சர்கள்
போதி மரத்து கிளையுடைத்து
நிழல் படுக்கை செய்வாய்
நீயே தேவ தூதன்....!

கல்லாய் போன
கடவுளிடம் ஒரு கேள்வி
கடலளவு தமிழர் இரத்தம்
குடித்தும்
அடங்கவில்லையா
உன் தாகம் மட்டும்…?
இனிமேல் அடுப்பெரிக்கவாவது
உதவட்டும்
கிழிந்துப்போன
பகவத்கீதையும் பைபிளும் .

வியாழன், 1 ஜூலை, 2010

கற்பிணங்கள்


விழியோர கண்ணீரில்
வழிகிறது நம் கனவுகள்
விடைப் பெற்றிட துடிக்குது
கூட்டிலெஞ்சிய உயிர்முற்வேலிக்குள்ளே முடங்கிக்கிடக்குது
எங்கள் வானம்

முகாரியில் வீசுது
எமைத் தீண்டும் காற்று

முகாமுக்குள்ளேயே முடிந்திடுமோ
எமது வாழ்வு….?

சனி, 26 ஜூன், 2010

ஹெக்கூ...

அழுகிப்போன சதைத்துணுக்குகளில்
மடிந்துக் கிடக்குது
மானுடம்.

வெள்ளி, 7 மே, 2010

ஜன்னலோர தேவதை


( இக்கவிதை 2001.06.13 ல் தமிழ்மொழித் தினப்போட்டிக்காக எழுதியது. )

சன்னலோரத்தில் தவமியற்றும்
சிலையவளை நோக்கிய தோழி
புன்னகைப்பூக்களை சிதறடித்தே
பூவையவளை நெருங்கினாள்

“கண்களில் ஏனடி கண்ணீர்”
காரிகையை வினவினாள் தோழி
“பெண்களுக்கே உரித்தான வேதனை
பெரியோர் செய்து வைத்த சோதனை

எத்தனையோ எதிர்பார்ப்பு மனதில்
எழுதி வைத்த மணநாள்
அத்தனையும் இன்று நனவில்
ஆற்றிலிறங்கிய மண் குதிரையானதடி

பெண் பார்க்கும் படலமென்றார்
பேதை நான் வியாபாரப்
பண்டமென்றே பார்வையிட்டார்
பாட்டொன்று பாடென்றார்

பரதமும் ஆடென்றார் பெண்ணை
பேசச்சொல்லுங்கள் என்றே
குரலோடு மனதையும் சோதித்தார்
கன்னியெனை உள்ளேயனுப்பினாரடி

கதவோரம் மறைந்திருந்தேன்
கற்பனையில் மிதந்திருந்தேன்
விதவிதமான கனவுகளில் புவியை
வில்லாய் வளைத்திருந்தேன்

முன்னறையில் இரகசியம் பேசும்
மூத்தோர் குரல் கேட்க
என் செவிகளையும் விரித்து
ஆவலோடு காத்திருந்தேனடி தோழி

மாப்பிள்ளைக்கு ஜரிகைப்பட்டு
மின்னும் சங்கிலி நு}று
சாப்பாட்டுச்செலவு உறவினரின்
சத்திரச் செலவு முழுதும் உமது

பட்டுப்புடவை வைர தங்க நகைகள்
பத்துப்பவுணில் தங்க மோதிரம்
தட்டுக்கள் பலநு}று அதனோடு
திருமணச் செலவு முழுவதும் உமது

சம்பந்தியினர் பட்டியலடுக்க
சிந்தை கலங்கிய எந்தந்தை
நிம்மதியிழந்தார் அன்று முதல்
நரகம் என்பதன் பொருளுணர்ந்தார்

முந்தைய பிறப்பின் பயனோ
முன்னோரின் பாவக்கடனோ
தந்தையின் வேதனை குறையவில்லை
திருமணக்கனவும் கலையவில்லை

அமிலத்தை காதில் பாய்ச்சியவன்
அடுத்தவள் தேடி பறந்துவிட்டான்
நமிடத்தில் மனதை மாற்றிவிட்டான்
நானோ நெருப்புள் உமியானேன்

ஆண்களுக்கு இதயம் வைக்க
இறைவனும் மறந்து விட்டான்
கண்ணீரில் நானிங்கு தினமும்
கரைந்து மாள்கிறேன்

பொருளுக்கும் விலையுண்டு நானோ
பலர் பார்க்க பொருளானேன்
விருந்துண்டு பொருளும் பொருளின்
விலையும் பெறும் விசித்திரச்சந்தை

வியாபாரிகளாய் வந்து எனை
விலை பேசிய வீணர்களே !
மயானத்தில் வந்துமெனை
மயக்காதீர்கள் கோழைகளே !

எண்ணில்லா கொடுங்கனவுகள்
எனக்குள் உதித்து மறைகிறது
கண்ணீரில்லா மீனைப்போல
துடிக்கிறேன் தினமும் நானே!

எரிமலைக்குள் உழல்கின்றேன்
எனைமீட்பார் யாருமில்லை
பரிவோடு எனையணைக்க
பாருக்குள் எவருமில்லை

கைப்பிடிக்க கைப்பணமும்
கொடுக்கின்ற கொடுங்காலம்
தைப்பிறப்பில் மறையாதோ இந்த
தரணியெங்கும் பரவாதோ புதுமை!”

தோழியுரைத்த சோகம் கேட்டு
தோகையழுத்தாள் நெடுநேரம்
“வாழியுரைக்க வந்தேன் தோழி
வீழ்ந்து விட்டாய் ஆண்களை நம்பி

சரித்திரத்தில் இல்லா கொடுமை
சீக்கிரமே ஒழியட்டுமே
சிரிக்கின்ற பெண்களுருவம்
சாளரத்தில் பெருகட்டுமே”

வெள்ளி, 16 அக்டோபர், 2009

கலியுகம்

அழிய வேண்டிய
அழிக்க வேண்டிய
நரகாசுரர்கள்
உயிருடன் உலவுகையில்
கொண்டாடுகிறோம் தீபாவளி.

புதன், 10 ஜூன், 2009

மாற்றங்கள்

மாற்றங்கள் வேண்டும் அகராதியில்
எட்டப்பன் என்ற சொல்லை
எடுத்துவிடுங்கள்
கருணா என்ற சொல்லிருக்கு
காட்டிக்கொடுப்பவன்
என்ற பொருளுக்கு

ஞாயிறு, 17 மே, 2009

உறுத்தல்

என் வாயில் ஒரு தொற்றுப்பல்
எப்போதும் உறுத்திக்கொண்டேயிருந்தது
விழுந்தால் போதுமென்றிருந்தேன்
விழுந்தபோதுதான் தோன்றியது
இருந்திருந்தால் மேலென்று!

திங்கள், 6 ஏப்ரல், 2009

இறுதி யாத்திரை

கண்கள் கூச
உறக்கம் தொலைத்தோம்

பொழுது புலர்ந்தாயிற்றாம்

மீண்டும் தொடங்குகிறோம்
எங்கு செல்கிறோம்…?
எதற்காய் செல்கிறோம்…?

விடைகளற்ற வினாக்களோடு
தொடர்கிறது பயணம்

எதிரிகளின் குண்டுகள்
சுவை பார்த்த தேகம்

காட்டு வழி முற்களும்
எம்மைத் தீண்ட
வெட்கித் தலை குனியும்

கால்கள் தொலையும்
வழி தேடி
மனமும் அலையும்

பாலுக்காய் அழும்
குழந்தைகள்
இரத்தம் தாராளம்

பசியோடு அலையும்
கொடும் காட்டு விலங்குகளும்
இரக்கத்தோடு பாதை விலகும்

தமிழ் குழந்தைகள்
எதிரிகளின்
பயிற்சி இலக்குகள்

பாதையெங்கும்
பழகிய பிணவாடை
கருகிப்போன தமிழுயிர்கள்

உயிர் களைக்கும்
போதெல்லாம்
எஞ்சிய மழலைகளின்
அழுகுரல்
புத்துயிர்ப்பு

மரண ஓலங்கள்
கண்ணீர்ப் பாதைகள்
என்றாலும்
தொடர்ந்து செல்வோம்

நாளைய உதயம்
எமக்கில்லை
உயிர்ப்பிரியும்
இறுதி வினாடிகளின் நப்பாசை
கிழக்குச் சூரியன்

செவ்வாய், 24 மார்ச், 2009

கல்லறை ஒதுக்கீட்டுத்திட்டம்

நாளைய பொழுது
இருப்பேனா? இறப்பேனா?
என்று தெரியாமலே
விடிகிறது காலை!

தமிழர்கள் வாழும்
இடமெங்கும்
கல்லறைக்கு இடமேது?

எனவேதான்
இந்த முன்பதிவுத்திட்டம்.

ஹெக்கூ...

பேரினவாதிகளின் பசிக்கு
பெருந் தீனி
சமாதானப் புறா...!

ஞாயிறு, 18 ஜனவரி, 2009

காத்திருக்குமா தென்றல்…?

மரணத்தின் தூர இடைவெளிகளில்
நிதமும் சஞ்சரிப்பவர்கள் நாம்…!
எப்போது ரசிக்கப் போகிறோம்
காற்றின் சலசலப்பை…?

செவ்வாய், 13 ஜனவரி, 2009

விதைகள்

அழிந்து வரும்
அழிக்கப்பட்டு வரும்
தமிழினத்தின் விதைகள் நாம்.
ஒவ்வொரு விதைகளுக்குள்ளும்
ஒளிந்து கிடக்கும்
விருட்சங்கள் !

விதைப்பதற்குதான்
விதைவதற்குதான்
எமக்கென்று இடமில்லை…